உஷார்... தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக, இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இவற்றுடன் சேர்த்து, விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாகப் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
