உஷார்... வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... நாளை முதல் நவ.20 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
வங்கக்கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நாளை நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வானிலை சலனத்தால் நவம்பர் 15 முதல் 20-ம் தேதி வரை வடதமிழகம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்பது பின்னர் வெளியாகும் வானிலை அறிவிப்புகளின் அடிப்படையிலேயே உறுதியாகும்.
