உஷார்.. புதிய புயல் சின்னம்... 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை - 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இன்று தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது.
வரும் நவம்பர் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
