உஷார்... பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை... ஏ.ஐ. மூலம் உறவினர் குரலில் பேசி பணம் பறிக்கும் மோசடி - பெங்களூரில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குரலிலேயே பேசி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் புதிய சைபர் மோசடி பெங்களூருவில் அதிகரித்து வருகிறது. இது குறித்துப் போலீசார் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணையக் குற்றவாளிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் பயனர்களின் சில வினாடி அளவிலான சிறிய குரல் பதிவுகளை சேகரிக்கின்றனர். ஏ.ஐ. மென்பொருட்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபரின் அசல் குரல் போலவே செயற்கைக் குரலை உருவாக்கி, அவர்களின் குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ போனில் தொடர்பு கொள்கின்றனர்.

எதிர்தரப்பில் பேசுபவர் உறவினரின் குரலிலேயே பேசி, "திடீர் விபத்து ஏற்பட்டுவிட்டது அல்லது தீவிர மருத்துவ உதவி தேவைப்படுகிறது" எனக் கூறி உடனடியாகப் பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றனர். யோசிக்கக் கூட அவகாசம் தராமல் அவசரப்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பக் கோரி ஏமாற்றுகின்றனர்.
தெரியாத எண்களிலிருந்து உறவினர்கள் குரலில் அழைப்பு வந்து பணம் கேட்டால் உடனே அனுப்ப வேண்டாம். அழைப்பாளர் எவ்வளவு தான் அவசரப்படுத்தினாலும், உடனே போனைத் துண்டித்து விட்டு உங்களது போனில் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள அவர்களின் அசல் எண்களுக்குத் திரும்ப அழைத்து உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அழைப்பில் பேசுபவரிடம், அந்த நெருங்கிய நபருக்கு மட்டுமே தெரிந்த தனிப்பட்ட அல்லது பழைய ரகசியத் தகவல்களைக் கேள்விகளாகக் கேட்டுச் சோதிக்கலாம்.

சிறிது விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற அதிநவீன ஏ.ஐ. போலி அழைப்பு மோசடிகளில் இருந்து பணத்தைப் பாதுகாக்க முடியும் என்று சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
