உஷார்... தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது... மீறினால் இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!

 
இன்று மேற்கு வங்க இறுதி கட்டத் தேர்தல்!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று மாலை முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இன்று மாலை முதல் மத்திய மாநில அரசுகள் புதிய திட்டங்கள், அறிவிப்புகளை அரசு வெளியிடக்கூடாது. அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகே நடைமுறைக்கு கொண்டு வரப்படும். எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, சாதி, மதம், இனம், மொழி தொடர்பான வேற்றுமைகளை பேசி மக்களிடையே கசப்பு உணர்வையும், சலசலப்பையும் ஏற்படுத்தக் கூடாது.
அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுவது, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், பழைய சம்பவங்கள், பணிகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருவரது பொது வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசக் கூடாது.

ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் அளிக்கக் கூடாது. அவரது வீட்டு முன் பிரசாரக் கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப் பொருள் கொடுக்கக் கூடாது.
ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக் கூடாது. தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.

தேர்தல்

ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக் கூட்டத்தில் மற்ற கட்சியினர் புகுந்து கேள்வி கேட்பது போன்ற செயலில் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. அந்த நபர் மீது கட்சியினர் யாரும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. போலீஸாரின் உதவியை நாட வேண்டும். ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் அகற்றக் கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர், பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே போலீஸாரிடம் தகவல் அளிக்க வேண்டும்.

ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியை பெற வேண்டும். ஊர்வலத்திற்கு அனுமதி பெற்றிருந்தால், அது செல்லும் இடம், நேரம் ஆகியவற்றை பின்னர் மாற்றக் கூடாது. கொடும்பாவி பொம்மைகளை எரிக்கக் கூடாது. தேர்தல் பிரசாரத்திற்காக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஆளும் கட்சியினர் மீது புகார்கள் வரக்கூடாது. அமைச்சர் தனது அலுவலக பணிகளை தேர்தல் பணிகளுடன் சேர்க்கக் கூடாது. தேர்தல் பிரசாரத்தின்போது அரசின் உபகரணங்களையோ, அலுவலர்களையோ பயன்படுத்தக் கூடாது.

ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையர்

அதிகாரத்தில் இருக்கும் கட்சியினர், அரசுக்கு சம்பந்தப்பட்ட விமானம் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. அமைச்சர்கள் தங்களின் தனி அதிகாரத்திற்கு உட்பட்ட நிதி, மானியங்களை அனுமதிக்கக் கூடாது. நிதி உதவிகளைப் பற்றி அறிவிப்பு வெளியிடக் கூடாது. திட்டங்களுக்கான அடிக்க நாட்டுவது, திறந்து வைப்பது ஆகியவற்றை செய்யக் கூடாது. சாலை அமைக்கப்படும், குடிநீர் வசதி செய்து தரப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடக் கூடாது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியினர், அரசின் செலவில் விளம்பரம் வெளியிடவோ, ஊடகங்களில் பிரசாரமோ செய்யக் கூடாது.

பொதுக் கூட்டங்கள் நடைபெறும் மைதானம், ஹெலிகாப்டர் இறங்குதளம், அரசு விருந்தினர் மாளிகை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்தலின் போது தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில், தற்காலிகமாக அதிகாரி யாரையும் ஆளும் அரசு நியமிக்கக் கூடாது. அரசு சாரா பணி நியமனங்கள், பொதுத்துறையில் பணி நியமனங்களை செய்யக் கூடாது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் அறிவிப்பு செய்தி வெளியாகி 2 மணி நேரத்திற்குள், அரசாணை பதிவு ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ள கடைசி அரசாணை எண்ணுக்கு கீழ் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் பேனாவினால் கோடு போட வேண்டும். அதை படம் எடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியும். தவறான குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியாது என பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

From around the web