உஷார்.. நாடு முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் யுபிஐ சேவை நிறுத்தம் - மத்திய அரசுக்கு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை!
பெட்ரோல் பங்குகளில் செய்யப்படும் யுபிஐ வணிகப் பரிவர்த்தனை கட்டணங்களால் தங்களின் லாப வரம்பு கடுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அகில இந்திய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், இதுகுறித்து ஒன்றிய அரசுக்குக் கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விற்பனையில் ஏற்கனவே மிகக் குறைவான கமிஷன் தொகையே வழங்கப்பட்டு வரும் சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காகப் பிடிக்கப்படும் கூடுதல் கட்டணம் தங்களுக்குப் பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்துவதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யுபிஐ பரிவர்த்தனை கட்டணங்களிலிருந்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், பெட்ரோல் பங்குகளில் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை முறையை ஏற்பதை முற்றிலுமாக நிறுத்த நேரிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பெட்ரோலிய விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருமளவில் புழக்கத்தில் உள்ள நிலையில், சங்கத்தின் இந்த திடீர் எச்சரிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
