உஷார்.. கோவை குடியிருப்புப் பகுதியில் காட்டுயானை நடமாட்டம் - பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!

 
யானை

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வசித்து வரும் நிலையில், சின்னதடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி நடராஜ் தோட்டத்திற்குள் 'வேட்டையன்' என்று அழைக்கப்படும் காட்டுயானை நள்ளிரவில் புகுந்துள்ளது.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானையைத் தீவிரமாக விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதி மற்றும் தடாகம் செல்லும் வழிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் தடாகம் வழியாகச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.