சென்னையிலிருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து!

 
விமானம் விமான நிலையம்

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூண்டுள்ளதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காகச் சர்வதேச வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாகச் சென்னையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படும் விமானச் சேவைகள் இன்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வெளியில் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், சென்னையிலிருந்து துபாய் மற்றும் அபுதாபி செல்லும் 'எமிரேட்ஸ்', 'இண்டிகோ' மற்றும் 'ஏர் இந்தியா' விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால், அந்த நாட்டுக்கான விமானச் சேவைகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன.

அபுதாபி போர்

கத்தார் மற்றும் குவைத் நாடுகளும் தங்களது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளதால், அந்த நாடுகளுக்கான விமானங்களும் இயக்கப்படவில்லை. விமானங்கள் ரத்து செய்யப்பட்ட தகவலால் சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

போர்ச் சூழல் சீராகும் வரை வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்கள் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம் அல்லது மாற்றுத் தேதிகளில் பயணத்தைத் திட்டமிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி போர்

வளைகுடா நாடுகளைக் கடந்து செல்லும் லண்டன், பாரிஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான விமானங்கள் தற்போது நீண்ட மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயண நேரம் 3 முதல் 5 மணி நேரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன்' ஏதேனும் தொடங்கப்படுமா என்பது குறித்து இந்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதுவரை பயணிகள் அவசரமின்றித் தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.