அனைத்து பதக்கங்களும் ரத்து... இந்திய பாரா ஈட்டி எறிதல் வீரர் வசிஷ்டாவிற்கு 3 ஆண்டுகள் தடை - ஊக்கமருந்து சோதனையில் சிக்கி அதிர்ச்சி!
இந்திய பாரா ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் அன்மோல் வசிஷ்டா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு சர்வதேச பாராலிம்பிக் குழு 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற உலக பாரா தடகளக் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் போது, வீரர்களுக்கு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அன்மோல் வசிஷ்டாவின் மாதிரிகளைச் சோதனை செய்ததில், விளையாட்டுகளில் தடைசெய்யப்பட்ட 'டிஹெச்சிஎம்டி' என்ற அனபாலிக் ஸ்டீராய்டு மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இந்த ஊக்கமருந்து விதிமீறலைத் தொடர்ந்து, ஏப்ரல் 24, 2026 முதல் ஏப்ரல் 23, 2029 வரை அவர் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளையாட்டுப் போட்டியிலும் அல்லது விளையாட்டு சார்ந்த நடவடிக்கைகளிலும் பங்கேற்க சர்வதேச பாராலிம்பிக் குழு தடை விதித்துள்ளது.
மேலும், டெல்லி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F55 பிரிவில் அவர் பெற்ற முடிவுகள், புள்ளிகள் மற்றும் பதக்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பரிசுகளும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பாரா விளையாட்டுத் துறையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
