“அள்ள அள்ள பணம்... கழுத்து முழுக்க நகைகள்...” வீடியோ வெளியிட்ட பிரபலம்... கொள்ளையார்கள் வீடு புகுந்து 120 சவரன் நகை, பணம் கொள்ளை!

 
நாகர்கோவில் இன்ஸ்டா யூ-ட்யூபர் மதுமிதா

நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் காலனியில் வசித்து வரும் பிரபல யூடியூபர் மதுமிதா மற்றும் அவரது கணவர் வினோத்குமார் வீட்டின் கதவை உடைத்து, 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், பணம் ஆகியவை மர்மக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமார் ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வரும் நிலையில், அவரது மனைவி மதுமிதா யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ச்சியாக ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். குறிப்பாக, தான் வாங்கும் புதிய தங்க நகைகள், கழுத்து நிறைய நகைகள் அணிந்து கொண்டும், மெத்தையில் கட்டுக்கட்டாகப் பணத்தை அள்ளிப் போட்டுக் கொண்டும் அவர் ஆடும் நடன வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். மேலும், தாங்கள் எங்கு செல்கிறோம் என்ற பயண விவரங்களையும் அவர் பொதுவெளியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களின் சமூக வலைதளப் பதிவுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த கொள்ளையர்கள், குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டைக் கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 சவரன் தங்கம், வைர நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் (மதிப்பு சுமார் ரூ.1 கோடி) ஆகியவற்றை முழுமையாக அள்ளிச் சென்றுள்ளனர்.

நகை கொள்ளை

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியினர், பீரோ உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாகச் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்தே இந்தத் துணிகரக் கொள்ளை அரங்கேறியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக 3 தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.