கனமழையால் அமர்நாத் பனி லிங்கம், வைஷ்ணோ தேவி யாத்திரைகள் தற்காலிகமாக ரத்து!

 
அமர்நாத் பனி லிங்கம்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, உலகப் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் மாவட்டம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு பரவலான மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பஹல்காம் மற்றும் பால்தல் ஆகிய இரண்டு முக்கியப் பாதைகளிலும் யாத்திரீகர்கள் மேலே செல்ல தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் நிர்வாகப் பிரிவின் ஆணையர் அன்ஷுல் கார்க் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, பால்தல் மற்றும் நுன்வான்/சந்தன்வாரி ஆகிய பேஸ் கேம்ப்களில் இருந்தும், ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்தும் பக்தர்கள் மேற்கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமர்நாத்

காஷ்மீரின் வனப்பகுதிகளில் இன்று அதிகாலையில் மேகவெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த மழை தீவிரமடைந்துள்ளது. மலைப்பாதைகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், பாதைகளின் பாதுகாப்புத் தன்மை மற்றும் வானிலையை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே யாத்திரை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமர்நாத் யாத்திரை மட்டுமன்றி, ஜம்மு பகுதியில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணோ தேவி மற்றும் சிவகோரி ஆகிய புனித யாத்திரைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு! அமர்நாத் யாத்திரை ரத்து! பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

மலைப்பாதைகளில் பயணம் செய்வது தற்போதைய சூழலில் ஆபத்தானது என்பதால், நிலைமை சீராகும் வரை பக்தர்கள் தங்களின் பயணங்களைத் தள்ளிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 28-ம் தேதி ரக்‌ஷாபந்தன் அன்று நிறைவடைய உள்ளது. யாத்திரை தொடங்கிய இந்த 16 நாட்களில் மட்டும் இதுவரை 3.76 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பனிலிங்கத்தை நேரில் தரிசித்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.