இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலைநாட்கள் - அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில் அசுர வளர்ச்சியை எட்டி வரும் நிலையில், எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உழைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் எனத் தொழில்நுட்பத் துறையின் முன்னணி ஜாம்பவானும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ் புதிய கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் காரணமாக வரவிருக்கும் ஆண்டுகளில் மனிதர்களின் வேலை நேரம் குறைந்து, வாரத்தில் வெறும் 3 நாட்கள் வேலை செய்தாலே ஒரு குடும்பத்தை நிம்மதியாக நடத்தத் தேவையான வருமானத்தைப் ஈட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலத்தில் குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்ற கட்டாயச் சூழல் நிலவி வருகிறது. ஆனால், எதிர்காலத்தில் இந்த நிலை முற்றிலும் மாறிவிடும் என ஜெப் பெசோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பம் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யும். மனிதர்கள் செய்யக்கூடிய பெரும்பாலான கடினமான மற்றும் சலிப்பான பணிகளைத் தொழில்நுட்பமும் ரோபோக்களும் மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாகச் செய்து முடிக்கும். இதன் காரணமாகக் குடும்பத்தில் இருவர் சம்பாதிக்க வேண்டிய அவசியம் மாறி, இனி ஒருவரின் வருமானமே ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக மாறும் பொற்காலம் உருவாகும் என்று அவர் கூறியுள்ளார். மனித உழைப்பு பெருமளவு மிச்சப்படுத்தப்படுவதால், வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் பணிபுரிந்தால் போதுமானதாக மாறும் எதிர்காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
