அமேசானில் அதிர்ச்சி... Great Indian Festival தொடங்கிய நேரத்தில் 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்...!

 
அமேசான்

 

இந்தியாவில் அமேசானின் Great Indian Festival விற்பனை தொடங்கியுள்ள நிலையில், நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர் கட்டமைப்பில் மீண்டும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமேசானின் Stores பிரிவில் 1,000-க்கும் குறைவான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேசானின் முக்கிய ஆன்லைன் வர்த்தக செயல்பாடுகளை கவனிக்கும் Stores பிரிவில்தான் இந்த முறை அதிகளவில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Customer Service, Selling Partner Services, Marketplace Support மற்றும் சில்லறை வர்த்தகத்துடன் தொடர்புடைய சில Engineering பணிகளிலும் இந்த நடவடிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பதை அமேசான் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், Economic Times தகவல்படி இந்தியாவில் குறைந்தது 100 பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து அமேசான் செய்தித் தொடர்பாளர், நிறுவனத்தின் Stores பிரிவின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய முன்னுரிமைகளுக்கு ஏற்ப பணியாளர் அமைப்பை மாற்றியமைப்பதற்காக சில பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அமேசான் செயற்கை நுண்ணறிவு துறையில் மிகப்பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. டேட்டா சென்டர்கள், சிப்கள் உள்ளிட்ட AI உள்கட்டமைப்புக்காக சுமார் 220 பில்லியன் டாலர் செலவிட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பாரம்பரிய பணியாளர் கட்டமைப்பை குறைத்து, எதிர்கால தொழில்நுட்ப முன்னுரிமைகளுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு முதல் 2026 ஜனவரி வரை அமேசான் சுமார் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை குறைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவில் Great Indian Festival விற்பனை தொடங்கியுள்ள நேரத்தில் அமேசானில் பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.