ஓராண்டில் 946 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்திய அமேசான் நிறுவனம்... டேட்டா சென்டர்களால் வறண்டு போகும் உலக நாடுகள்!

 
அமேசான் டேட்டா சென்டர் தண்ணீர் அமேசான் டேட்டா சென்டர் தண்ணீர்

உலகெங்கிலும் உள்ள தனது பிரம்மாண்ட டேட்டா சென்டர்களைக் குளிர்விப்பதற்காக, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனம் சுமார் 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளதாகத் தனது நிலைத்தன்மை அறிக்கையில்  முதன்முறையாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு  மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளுக்கான தேவை உலகளவில் அசுர வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தரவுகள் தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

நவீன ஏஐ மாடல்களை இயக்குவதற்கும், தரவுகளைச் சேமிப்பதற்கும் பல்லாயிரக்கணக்கான உயர்ரக சிபியு மற்றும் ஜிபியு செயலிகள் இடைவிடாது இயங்க வேண்டும். இதனால் டேட்டா சென்டர்களில் வெளியாகும் அதீத வெப்பத்தைத் தணித்துக் கணினிகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்கத் தினந்தோறும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அமேசான் நிறுவனம் தனது ஒட்டுமொத்த டேட்டா சென்டர் நெட்வொர்க்கின் நீர் பயன்பாட்டு அளவை வெளிப்படையாக அறிவிப்பது இதுவே முதல்முறையாகும்.

டிஜிட்டல் தாகம் தண்ணீர்

இருப்பினும், தனது உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் வணிகத்தின் அளவோடு ஒப்பிடும்போது இந்த நீர் பயன்பாடு மிகவும் கட்டுக்கோப்பானதுதான் என்று அமேசான் விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-இல் டேட்டா சென்டர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த போதிலும், புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் தங்களின் ஒட்டுமொத்த நீர் நுகர்வை 2 விழுக்காடு வரை குறைத்துள்ளதாக அமேசான் வெப் சர்வீசஸ் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் மெட்டா போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, தங்களின் டேட்டா சென்டர்கள் தண்ணீரை மிகவும் திறம்படப் பயன்படுத்துவதாக அமேசான் உரிமை கொண்டாடியுள்ளது.

ஒரு கிலோவாட்-அவர் மின்சாரப் பயன்பாட்டிற்கு அமேசான் 0.12 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறது. ஆனால், இதே பயன்பாட்டிற்கு மைக்ரோசாஃப்ட் 0.27 லிட்டரும், கூகுள் (ஜெமினி ஏஐ டேட்டா சென்டர்களில் மட்டும்) 1.15 லிட்டரும் பயன்படுத்துவதாக அமேசான் தனது அறிக்கையில் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. ஆண்டின் 90 விழுக்காடு நாட்களில் அமேசான் வெளிப்புறக் காற்றைக் கொண்டே குளிரூட்டுவதாகவும், கோடைக் காலத்தின் மிக வெப்பமான நாட்களில் மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் அமேசான்

டேட்டா சென்டர்கள் உள்ளூர் நீர் ஆதாரங்களைச் சுரண்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 'வாட்டர் பாசிட்டிவ்'  என்ற நிலையை எட்ட அமேசான் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது, தனது தேவைக்குப் பயன்படுத்தும் தண்ணீரை விடக் கூடுதல் தண்ணீரைச் சமூகத்திற்குத் திரும்ப வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இதற்காக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட மறுசுழற்சி நீரைக் கொண்டு 26 டேட்டா சென்டர்களை 100% இயக்கி வருவதாகவும், உலகளவில் மேலும் 130 நிலையங்களில் இந்த முறையைக் கொண்டு வர ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு நீர் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் தங்களின் இலக்கில் 75 விழுக்காட்டை ஏற்கனவே எட்டிவிட்டதாகவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.