லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து; ஓட்டுநர் உட்பட 4 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தில் சண்டீகரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய கோர விபத்தில், ராணுவ வீரரின் மகன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபேதார் மேஜர் சத்யவான் சிங் என்பவர், சண்டீகரில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலைச் சொந்த ஊரான தியோரியா கிராமத்திற்கு ராணுவ ஆம்புலன்ஸ் மூலம் குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, அயோத்தி - சுல்தான்பூர் எல்லைப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
விபத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ராணுவ வீரரின் மகன் கவுரவ் சிங் (28) மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜஸ்பால் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராஜன் சௌத்ரி (35) மற்றும் ராம் சமுஜ் சிங் (40) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீண்ட நேரம் வாகனம் ஓட்டியதால் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே குடும்பத் தலைவர் இறந்த துயரத்தில் இருந்த குடும்பத்தினருக்கு, அவரது இறுதி ஊர்வலப் பயணத்தின்போதே மகனும் உறவினர்களும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது.
