மதுரை திருமங்கலத்தில் தடுப்புச்சுவரைத் தாண்டி கார் மீது மோதிய ஆம்புலன்ஸ்.. 3 பேர் பலி!

 
ஆம்புலன்ஸ்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரைத் தாண்டி எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதிய விபத்தில், நோயாளியும் கல்லூரி மாணவரும் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரையைச் சேர்ந்த சரவண கணேஷ் என்பவருக்கு எலும்பு முறிவு சிகிச்சைக்காக ஜி.கே. மருத்துவமனையிலிருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு எஸ்.ஆர். ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருடன் அவரது நண்பர் பிரதீப் உடன் சென்றுள்ளார். மறுபுறம், தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியின் குடும்பத்தினர், கல்லூரி மாணவரான தமது மகன் ஆதித்யாவை (19) ஈரோட்டில் உள்ள விடுதியில் சேர்ப்பதற்காகக் காரில் சென்று கொண்டிருந்தனர். இக்காரில் ஆதித்யாவுடன் அவரது தாயார் சொர்ணலட்சுமி மற்றும் சகோதரர் மூர்த்தி (21) ஆகியோரும் பயணம் செய்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் விபத்து

மதுரை விமான நிலைய சாலை, சொக்கநாதன்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனச் சாலையின் தடுப்புச்சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இக்கோர விபத்தில் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காகச் சென்ற சரவண கணேஷ், அவரது நண்பர் பிரதீப் மற்றும் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர் ஆதித்யா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

மேலும், காரில் பயணம் செய்த சொர்ணலட்சுமி மற்றும் மூர்த்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்; ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்துத் திருமங்கலம் நகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் ஆம்புலன்ஸ் சென்ற வேகம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.