கணவனைக் காப்பாற்ற கடன் வாங்கி ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் விமானம்.. கடைசியில் 7 பேரையும் பலிவாங்கிய கோர விபத்து!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு துயரமான விமான விபத்து, நெஞ்சை உலுக்கும் சோகக் கதையைத் தன்னுள் மறைத்து வைத்துள்ளது. தனது கணவரின் உயிரைக் காப்பாற்றப் போராடிய ஒரு மனைவியின் நம்பிக்கையும், பெரும் பொருட்செலவும் சில நிமிடங்களில் சாம்பலாகிப் போனதுதான் அந்தத் துயரம்.
சஞ்சய் என்ற நபர் தான் நடத்தி வந்த உணவகத்தில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாகப் பயங்கரமான தீ விபத்தில் சிக்கினார். இதில் அவரது உடலில் 65% தீக்காயங்கள் ஏற்பட்டன. ஜார்க்கண்டில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரை உயர் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தனது கணவரை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிட வேண்டும் என உறுதியோடு இருந்த அவரது மனைவி, இதற்காகப் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். சுமார் ₹15 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை செலவு செய்து, அவரை டெல்லிக்குக் கொண்டு செல்லத் தனி 'ஏர் ஆம்புலன்ஸ்' விமானத்தை ஏற்பாடு செய்தார். நோயாளி சஞ்சய், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், இரண்டு உதவியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 7 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர்.

விமானம் ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே மோசமான வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்தது. வான்வழி கட்டுப்பாட்டு அறையிடம் பாதையை மாற்ற அனுமதி கோரிய சில நொடிகளிலேயே, விமானம் தரையில் விழுந்து நொறுங்கித் தீப்பிடித்தது. மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தியதில், ஏற்கனவே உயிருக்குத் தவித்துக் கொண்டிருந்த சஞ்சய் உட்பட விமானத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடன் வாங்கித் தனது கணவரின் உயிரை மீட்டெடுக்கப் போராடிய அந்தப் பெண்ணிற்கு, விதியின் விளையாட்டு ஈடு செய்ய முடியாத இழப்பைத் தந்துள்ளது. சில நேரங்களில் நவீனத் தொழில்நுட்பங்களும், பெரும் பணமும் கூட இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. ஒரு சிறிய மின்கசிவு ஒரு குடும்பத்தையே எப்படிச் சிதைக்கிறது என்பதற்கு இது ஒரு நேரடி உதாரணம்.
