நெஞ்சை பதறவைக்கும் வீடியோ... ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் சாகசம்!

 
bike

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொரகுண்டே பாளையாவில் இருந்து யஷ்வந்தபுரம் செல்லும் முக்கியச் சாலையில், கடந்த 4 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மனிதநேயமற்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்தப் பாதையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வீலிங் உள்ளிட்ட சாகசங்களைச் செய்தபடி வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில், உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை அவசரமாக ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று யஷ்வந்தபுரத்தில் இருந்து துமகூரு ரோட்டை நோக்கி வேகமாக வந்துள்ளது.

ஆம்புலன்சில் இருந்த மருத்துவ ஊழியர்கள் தங்களின் வாகன சைரனைத் தொடர்ந்து பலத்த சத்தத்துடன் ஒலிக்கச் செய்த போதிலும், முன்னால் சென்ற வாலிபர்கள் அதற்கு எள்ளளவும் மதிப்பளிக்கவில்லை. அவசரச் சிகிச்சைக்கான அந்த சைரன் சத்தத்தைக் கேட்டும், ஆம்புலன்சுக்குச் சிறிதும் வழிவிடாமல் தங்களின் 2 மோட்டார் சைக்கிள்களிலும் தொடர்ந்து ஆபத்தான சாகசங்களைச் செய்தபடியே வாலிபர்கள் வழியை மறித்துச் சென்றுள்ளனர். இந்த மனிதநேயமற்ற கொடூரச் செயலை ஆம்புலன்சின் பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பொதுமக்களிடையே கடுமையான கொந்தளிப்பையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. உயிருக்குத் தவிக்கும் நோயாளியை அழைத்துச் செல்லும் அவசர வாகனத்திற்கு வழிவிடாமல் மறிப்பது கொலை முயற்சிக்குச் சமமானது என்றும், அந்த வாலிபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய 4 வாலிபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.