அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்... துப்பாக்கி சூட்டில் 8 குழந்தைகள் சுட்டுக்கொலை... !

 
துப்பாக்கி துப்பாக்கி

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஸ்ரீவ்போர்ட் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 வயதுக்கு உட்பட்ட 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காலை இரண்டு வெவ்வேறு வீடுகளில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 7 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் சொந்தப் பிள்ளைகள் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துப்பாக்கி சூடு

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு வீட்டில் பெண்ணைத் தாக்கிய அந்த நபர், பின்னர் அடுத்த வீட்டிற்குச் சென்று அங்கிருந்த குழந்தைகளை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஒரு குழந்தை தப்பிக்க முயன்று வீட்டின் கூரை மீது சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் குழந்தைகளின் தாய் உட்பட மேலும் 2 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

போலீஸ்

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ஷமார் எல்கின்ஸ் என்ற 31 வயது நபரை காவல்துறையினர் விரட்டிச் சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய குடும்பப் பேரழிவு என காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.