கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை... கனடா நிறுவனம் வெளியேறுவதாக அறிவிப்பு!

 
கியூபா கியூபா

கியூபாவின் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் ராணுவத் தொழில் குழுமமான 'கேசா' மீது அமெரிக்க அரசு புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தத் தொழில் குழுமம் கியூபா ராணுவத்தால் நிர்வகிக்கப்படுவதால், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பொதுமக்களுக்குப் பயன்படாமல் ஆளும் வர்க்கத்திற்கே செல்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தடை உத்தரவு காரணமாக, கியூபாவுடன் சுமார் 32 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வர்த்தக உறவில் இருந்து வந்த கனடாவின் 'ஷெரிட்' நிறுவனம் தனது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே கடுமையான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தொடர் மின்தடையால் சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்தித்து வரும் கியூபா மக்களுக்கு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இந்தத் தடையின் மூலம் கியூபாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருக்கும் பிற நாட்டு நிறுவனங்களின் சொத்துகளையும் முடக்க அமெரிக்காவிற்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இதனால் அங்கு முதலீடு செய்துள்ள பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் கியூபாவை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளன. 

அமெரிக்காவின் இந்த அதிரடியான நடவடிக்கையானது கியூபா மக்களைப் பழிவாங்கும் செயல் என அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், ஆளும் வர்க்கத்தின் பிடியில் இருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவதால் கியூபாவின் பொருளாதாரம் வரும் நாட்களில் மேலும் சரிவைச் சந்திக்கும் என உலக நாடுகளின் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.