பயங்கரம்... அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது அரங்கேறியுள்ளது. இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்த பெண் குஜராத் மாநிலத்தின் மேசானா மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான Meghnaben Patel என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் உள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராகத் பணிபுரிந்து வந்துள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தன்று கடைக்குள் வாடிக்கையாளர் போல முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து நுழைந்த நபர், திடீரென தனது ஜாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து Meghnaben Patel நோக்கி அடுத்தடுத்து சுட்டுள்ளார். இதில் அவர் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூரத் தாக்குதல் கொள்ளை முயற்சியின் காரணமாக நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுவதுடன், இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீஸார் அந்தப் பகுதி முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளியை விரைந்து கைது செய்வதற்காகச் சிறப்புப் படைகளும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த Meghnaben Patel என்பவருக்கு Upendrabhai Patel என்ற கணவரும், Nakshi என்ற மகளும், Smith என்ற மகனும் உள்ளனர் என்பதால் இவரின் மறைவு அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
