அமெரிக்காவில் கோடைக்கால திருவிழாவில் துப்பாக்கிச்சூடு... 12 வயது சிறுவன் உட்பட 12 பேர் உடல் சிதறி படுகாயம்!
அமெரிக்காவின் ஒகையோ மாகாணம் டொலிடோ நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஓல்டு வெஸ்ட் எண்ட்' என்ற கோடைகால திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிகழ்வில் நேரடி இசை நிகழ்ச்சிகள், உணவு அரங்குகள் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் திரண்டு வருவர். அந்த வகையில் நேற்று மாலை இந்த திருவிழா நடந்து கொண்டிருந்த பகுதியில் திடீரெனப் பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அங்குள்ள பூங்கா பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தபோது, இரு மர்ம நபர்கள் தங்களுக்குள் திடீரென துப்பாக்கிகளால் சராமாரியாகச் சுட்டு மோதலில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சுட்டுக் கொண்டதில், அங்கு விழா கொண்டாட வந்த பொதுமக்கள் மீதும் குண்டுகள் பாய்ந்து கடும் கூச்சல் குழப்பம் உருவானது. இந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் 14 வயது சிறுவன் முதல் 61 வயது முதியவர் வரை மொத்தம் 12 பேர் உடல் சிதறிப் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடியதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு ஒகையோ மாகாண ஆளுநர் மைக் டிவைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டிய திருவிழாவில் இத்தகைய வன்முறை நடந்திருப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க அமெரிக்கப் போலீசார் தற்பொழுது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
