ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா... அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடி!

 
ஹெலிகாப்டர் ஹெலிகாப்டர்

 

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் காயமின்றி தப்பினர். இருப்பினும் இந்தத் துணிகரமான தாக்குதலுக்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் உத்தரவின் பேரில் ஈரானின் கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தற்காப்புத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு இது ஒரு தகுந்த பதிலடியாகும் என்று அமெரிக்கப் படை மத்திய தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே தற்போது பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மறுபுறம் அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் தங்களது படைகளால் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குத் தங்களது நாடு பொறுப்பல்ல என்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் தற்போதைய சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்குரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.