அமெரிக்கா கனமழையில் திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி இந்திய வாலிபர் பரிதாப பலி!
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், அங்கு ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தில் சிக்கித் துரதிர்ஷ்டவசமாகப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 33 வயதுடைய வெங்கடேஷ் தொப்பலபுடி என்ற வாலிபர், ஹூஸ்டன் நகரிலிருந்து தனது காரில் தனியாகத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கன்சாஸ் மாகாணத்தில் கொட்டித்தீர்த்த அதீத கனமழையின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் திடீரெனப் பயங்கரப் பெருவெள்ளம் ஏற்பட்டது.
வெல்லிங்டன் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகே வெங்கடேஷின் கார் சென்று கொண்டிருந்தபோது, சீறிப்பாய்ந்து வந்த வெள்ளநீர் அவரது காரை அப்படியே இடிபாடுகளுடன் இழுத்துச் சென்றது. கார் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியதால், அவர் காரினுள்ளேயே வெளியே வர முடியாமல் ஆபத்தான முறையில் மாட்டிக்கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கும் மீட்புக் குழுவினருக்கும் அவசரத் தகவல் கொடுத்தனர்.

இருப்பினும் வெள்ளத்தின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் மீட்புப் படையினரால் உடனடியாகத் தண்ணீருக்குள் இறங்கி அவரைப் பத்திரமாக மீட்க முடியாமல் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்தத் துயரமான சம்பவத்தில் காரில் சிக்கிய வெங்கடேஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த அகால மரணம் குறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் தங்களின் ஆழந்த கவலையைத் தெரிவித்துள்ளதுடன், உடலை இந்தியா கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.
