அமெரிக்காவில் காதலி படுகொலை... ஜெர்மனி விமான நிலையத்தில் இந்திய மாணவர் கைது!
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்தியாவைச் சேர்ந்த வருண் பட்சிகரி என்ற இருபது வயது இளைஞர் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு ஜூலிசா ருபி சலசிர் என்ற பத்தொன்பது வயதுடைய காதலி இருந்த நிலையில், இவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாகக் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதியன்று ஜூலிசா தங்கி இருந்த வீட்டிற்குச் சென்ற வருண் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வருண் தனது காதலி ஜூலிசாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து ஜெர்மனி நாட்டுக்குத் தப்பிச் சென்றதுடன் அங்கிருந்து இந்தியாவுக்குச் செல்லவும் தீவிரமாகத் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே பெண் கொலை செய்யப்பட்டது குறித்துத் தகவலறிந்த குடும்பத்தினர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார் வருண் ஜெர்மனி வழியாகத் தப்பிச் செல்வதை அறிந்து உடனடியாக அந்நாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்குச் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த வருணை ஜெர்மனி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை விரைவில் அமெரிக்காவுக்கு அழைத்து வந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
