ஓராண்டில் 1,207 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை! அமெரிக்கர் அசத்தல்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த 60 வயது கிளன்வுட் ஜாஸ்கின் ஜூனியர், ஓராண்டில் அதிக திரைப்படங்களைப் பார்த்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025-ம் ஆண்டு ஏப்ரல் வரையிலான ஓராண்டு காலத்தில், அவர் மொத்தம் 1,207 திரைப்படங்களைப் பார்த்துள்ளார். இதற்காக யார்க் ஹேவனில் உள்ள ரீகல் திரையரங்கிற்கு தினமும் சென்று, அதிகாலை முதல் நள்ளிரவு வரை அங்கேயே இருந்து திரைப்படங்களை ரசித்துள்ளார்.
திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜாஸ்கின், இதற்கு முன்பும் திரைப்படம் தொடர்பான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஒரே திரைப்படத்தை அதிக முறை பார்த்தவர் என்ற சாதனையும் ஏற்கனவே அவரது பெயரில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ள அவரது முயற்சி, திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
