8 மணி நேரம் விமானத்தில் வட்டமிட்ட அமெரிக்க பைலட்... டிஜிட்டல் வானில் உருவான GTA 6 பிரமாண்ட ஓவியம்!

 
அமெரிக்கா

 

உலகம் முழுவதும் வீடியோ கேம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் GTA 6 விளையாட்டுக்காக, அமெரிக்க விமானி ஒருவர் தனது விமானப் பயணத்தையே ஓவியமாக மாற்றியுள்ளார். சுமார் 8 மணி நேரம் விமானத்தை இயக்கி, விமானக் கண்காணிப்பு வரைபடத்தில் பிரமாண்டமான GTA 6 உருவத்தை உருவாக்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ‘தி பைலட் பிக்காசோ’ என அறியப்படும் பெஞ்சமின் மெக்டேனியல் என்பவர்தான் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி ஆர்கன்சாஸ் மாகாணத்தின் பென்டன்வில்லி விமான நிலையத்தில் இருந்து தனது செஸ்னா ரக சிறிய விமானத்தில் புறப்பட்ட அவர், 8 மணி நேரம் 8 நிமிடங்கள் பயணம் செய்தார்.

இந்தப் பயணத்தின்போது விமானத்தைத் திட்டமிட்ட பாதையில் இயக்கி, Flightradar24 போன்ற விமானக் கண்காணிப்புத் தளங்களின் டிஜிட்டல் வரைபடத்தில் GTA 6 லோகோ, ஹெலிகாப்டர், முதலை, பனை மரங்கள், ஸ்போர்ட்ஸ் கார் உள்ளிட்ட உருவங்களை வடிவமைத்தார்.

இது வானில் நேரடியாக வரையப்பட்ட ஓவியம் அல்ல; விமானம் சென்ற பாதையை வரைபடத்தில் இணைத்துப் பார்க்கும்போது ஓவியமாகத் தெரிகிறது. இதற்கு முன்பும் மோனாலிசா, ஸ்பைடர் மேன் உள்ளிட்ட உருவங்களை இதே முறையில் அவர் உருவாக்கியுள்ளார். இந்த வித்தியாசமான முயற்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.