'இரும்பு நுரையீரல்' உதவியுடன் 73 ஆண்டுகள் வாழ்ந்த அமெரிக்காவின் கடைசி போலியோ நோயாளி காலமானார்!

 
மார்த்தா லில்லார்ட் அமெரிக்கா போலியோ

அமெரிக்காவில் போலியோ தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே அந்நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 73 ஆண்டுகளுக்கும் மேலாக 'இரும்பு நுரையீரல்' எனப்படும் மருத்துவச் சாதனத்தின் உதவியோடு சுவாசித்து வந்த மார்த்தா ஆன் லில்லார்ட் (78) காலமானார். இவரே அமெரிக்காவின் கடைசி போலியோ நோயாளி ஆவார்.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த மார்த்தா லில்லார்ட், கடந்த சூன் 26-ஆம் தேதியே உயிரிழந்துவிட்டதாகவும், சில நடைமுறைகளுக்குப் பின் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

1948-ஆம் ஆண்டு பிறந்த மார்த்தாவுக்கு, 5 வயதாக இருந்தபோது (1953-ல்) கடுமையான போலியோ நோய் தாக்கியது. அப்போது அமெரிக்காவில் போலியோ தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருக்கவில்லை.இந்த நோயின் தீவிரத்தால் மார்த்தாவின் கழுத்துக்குக் கீழே உள்ள அனைத்து உடல் பாகங்களும் முழுமையாக முடங்கின. இதனால் அவரால் சுயமாகச் சுவாசிக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.

சுயமாகச் சுவாசிக்க முடியாததால், மருத்துவர்கள் அவரை ஒரு பெரிய உலோக உருளை வடிவ 'இரும்பு நுரையீரல்' எனப்படும் செயற்கை சுவாச எந்திரத்திற்குள் வைத்தனர். "இவரால் 20 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பது கடினம்" என்று அப்போது மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால், தனது மனஉறுதியால் 78 வயது வரை அவர் வாழ்ந்து காட்டினார். உடல் முழுவதும் முடங்கி, இரும்பு உருளைக்குள்ளேயே வாழ்ந்து வந்த போதிலும் மார்த்தா தனது வாழ்நாளை முடங்கிப் போய் கழிக்கவில்லை:

தனக்குச் சற்றே அசைக்க முடிந்த இடது கையைப் பயன்படுத்திப் பல அற்புதமான ஓவியங்களை வரைந்தார். அத்தோடு கவிதைகளையும் எழுதித் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், பிறருக்கு முன்மாதிரியாகவும் மாற்றினார். அண்மைக் காலத்தில் உலகை அச்சுறுத்திய கொடிய கொரோனா தொற்றால் மார்த்தா இரண்டு முறை கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதிலிருந்து அவர் மீண்ட போதிலும், அவரது நுரையீரலின் செயல்திறன் வெகுவாகக் குறைந்தது. இதன் தொடர்ச்சியாகவே அவரது உயிர் பிரிந்துள்ளது.

மார்த்தா ஆன் லில்லார்டின் மறைவின் மூலம், போலியோ நோய்க்கு எதிரான மனிதகுலத்தின் நீண்ட காலப் போராட்டத்தின் ஒரு முக்கிய வரலாற்று சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக உலக மருத்துவ அமைப்புகளும், மருத்துவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.