குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹3,000 - மேற்கு வங்கத்தில் அமித் ஷா வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

 
அமித் ஷா அமித் ஷா

மேற்கு வங்கத்தில் 'சோனார் பங்களா' (தங்க வங்காளம்) உருவாக்குவதற்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 'லட்சுமீர் பண்டார்' திட்டத்திற்குப் போட்டியாக, பாஜக இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என அமித் ஷா உறுதி அளித்துள்ள முக்கிய அம்சங்களாக,  மாநிலத்திலுள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 3,000 நேரடியாக அவர்களது வங்கிச் கணக்கில் செலுத்தப்படும். வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ரூ. 15,000 நிதியுதவி அளிக்கப்படும்.

எடப்பாடி அமித் ஷா

பாஜக ஆட்சி அமைந்த 45 நாட்களுக்குள் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். நிலுவையிலுள்ள அகவிலைப்படியும் (DA) வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ஊழல் மற்றும் ஊடுருவலுக்கு எதிராக 'Zero Tolerance' கொள்கை கடைப்பிடிக்கப்படும். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் பொது சிவில் சட்டம்  அமல்படுத்தப்படும்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, "கடந்த 15 கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி வங்காள மக்களுக்கு ஒரு சிம்மசொப்பனமாக இருந்தது. ஊழல், வன்முறை மற்றும் ஊடுருவலில் இருந்து வங்காளத்தை மீட்கவே பாஜக இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளது. இது வெறும் அரசியல் அறிக்கை அல்ல, வங்காள மக்களின் கனவுகளை நனவாக்கும் ஒப்பந்தம்," என்று தெரிவித்தார்.

அமித் ஷா

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அமித் ஷாவின் இந்த அறிவிப்புகள் தேர்தல் களம் மற்றும் பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக-வின் 5 முக்கிய வாக்குறுதிகளாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000, 33% அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, 45 நாட்களில் 7-வது ஊதியக் குழு அமல், 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் (UCC) அமல் ஆகியவை பார்க்கப்படுகிறது.