இன்று மசோதா தாக்கல் செய்கிறார் அமித் ஷா... இனி “வந்தே மாதரம்” பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி!
இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையிலான புதிய மசோதா ஒன்று, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்குவதற்காக இந்த சட்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடல், கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24- அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இப்பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, வந்தே மாதரம் பாடலைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட தேசிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கும் நோக்கில், ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு மசோதா’ இன்று நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், வந்தே மாதரம் பாடலுக்கான சட்ட விதிகள் மிகவும் கடுமையாக்கப்படும். இந்த மசோதாவின்படி பின்வரும் செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும்:
பாடல் தடையின்றிப் பாடப்படுவதைத் தடுப்பது அல்லது அதற்கு அவமரியாதை செய்வது. பொது அல்லது அரசு விதிகளின்படி பாட மறுப்பது. பாடலை முழுமையாகப் பாடாமல், சில பகுதிகளைத் தன்னிச்சையாக நீக்கிவிட்டுச் சில வரிகளை மட்டும் பாடுவது.
இந்த புதிய சட்ட விதிகளின்படி, வந்தே மாதரம் பாடலை அவமதிக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
