அம்மா உணவக இட்லிகளைத் தனியார் கடைகளுக்கு விற்று முறைகேடு -2 பெண் ஊழியர்கள் சஸ்பெண்ட்!

 
இட்லி அம்மா உணவகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் சமைக்கப்படும் இட்லிகளைத் தனியார் உணவகங்களுக்கு ரகசியமாக விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், அங்கு பணியாற்றி வந்த இரண்டு தற்காலிக பெண் ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் நோக்கில் குறைந்த விலையில் அரசு வழங்கும் உணவில் இத்தகைய முறைகேடு நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், தினசரி காலையில் ஏழைகளுக்காக விநியோகிக்கப்படும் இட்லிகள், பொதுமக்களுக்கு முழுமையாகக் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உள்ளூர் மக்கள் நடத்திய ரகசியக் கண்காணிப்பில், அங்கு சமைக்கப்படும் நூற்றுக்கணக்கான இட்லிகள், அதிகாலையிலேயே தனியார் உணவகங்களுக்கும், டிபன் கடைகளுக்கும் முறைகேடாகக் கடத்தப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த முறைகேடு குறித்த புகார்கள் சமூக வலைதளங்களிலும், நகராட்சி உயர் அதிகாரிகளிடமும் கொண்டு செல்லப்பட்டன. புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கோவில்பட்டி அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள இருப்புப் பதிவேடுகள் மற்றும் டோக்கன் விநியோகம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களான கங்கா மற்றும் சங்கரேஸ்வரி ஆகிய இருவர் தான் இந்த இட்லி கடத்தல் மற்றும் முறைகேட்டுச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட கங்கா மற்றும் சங்கரேஸ்வரி ஆகிய இருவரையும் பணியில் இருந்து உடனடியாக நீக்கம்  செய்து மண்டல இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இனிவரும் காலங்களில் அம்மா உணவகத்தில் இதுபோன்ற முறைகேடுகள் மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக, உணவக வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நகராட்சி அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.