"எடப்பாடிக்கு அம்மா ஆத்மா தண்டனை கொடுத்து வருகிறது" - அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

 
செங்கோட்டையன் செங்கோட்டையன்

தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய ஒருங்கிணைப்பாளராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளன. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவின் தற்போதைய நிலையை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தான் கொண்டுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்திய செங்கோட்டையன், இன்றும் தனது பாக்கெட்டில் அவரது படம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதிமுகவில் நிலவும் பிளவு குறித்துப் பேசிய அவர், "தலைவர் மீதும், மக்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குச் சரிவு வருவது இயற்கை. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின் போது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் படங்களைத் தவிர்த்து, தனது படத்தை மட்டுமே முன்னிறுத்தியவரின் கனவு இன்று தூள்தூளாகி உள்ளது. ஜெயலலிதா ஆத்மாதான் இன்று எடப்பாடி பழனிசாமிக்குத் தண்டனை கொடுத்துள்ளது என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

செங்கோட்டையன்

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் இந்த ஆட்சியை வியந்து பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். பணமில்லா தேர்தல்: ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரத்தை வீழ்த்தி, தூய்மையான அரசியல் வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கியுள்ளார்.

இலவச மின்சாரம்: வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மக்களின் சுமையைக் குறைத்துள்ளது. பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இருந்த மதுக்கடைகளை அகற்றும் முடிவுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளைப் போதைப்பொருட்களிலிருந்து மீட்கும் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

செங்கோட்டையன்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். தவெக-வின் மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இளைஞர்களும், பெண்களும் இந்த ஆட்சியை விரும்புவதாகவும், இதுவே 'மக்களின் ஆட்சி' என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தற்போது தவெக-வில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் செங்கோட்டையனின் இந்த விமர்சனம், அதிமுக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.