கிங்பிஷர் பீர் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 5 பெண்கள் உட்பட 6 பேருக்கு வாந்தி, மயக்கம்!

 
அமோனியா வாயு

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் புகழ்பெற்ற பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 6 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் அடுத்துள்ள அரண்வாயில் பகுதியில் யுனைடெட் புரூவரிஸ் எனப்படும் 'கிங்பிஷர்' பீர் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது: பீர் வகைகளைக் குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அம்மோனியா வாயு, சிலிண்டரில் இருந்து திடீரென கசியத் தொடங்கியுள்ளது. அப்போது பணியில் இருந்த 5 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்களுக்குக் கடுமையான மூச்சுத் திணறல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

வாயு

இச்சம்பவம் தொடர்பாக யுனைடெட் புரூவரிஸ் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில்,  வாயு கசிவு கண்டறியப்பட்ட உடனடியாகத் தங்களது நிபுணர் குழுவினர் அதனைத் தடுத்துக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். நிலைமை உடனடியாகச் சரிசெய்யப்பட்டதால் வேறு யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உரிய அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுச் சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் வட்டாட்சியர் சரண்யா, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போலிஸார் தொழிற்சாலைக்குள் சென்று நேரில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வு முடிந்து வெளியே வந்த வட்டாட்சியரின் காரை அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் தற்போதைய நிலை குறித்து ஆலை நிர்வாகம் எவ்விதத் தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை என்றும், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட விவரங்களை மறைப்பதாகவும் கூறி அதிகாரிகளுடன் பொதுமக்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.