அமோனியா வாயு கசிவு.. 7 நாட்களில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு - மேலும் உயரும் அபாயம்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
வாயு கசிவு விபத்து: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி எதிர்பாராத விதமாகப் பயங்கர நச்சுத்தன்மை வாய்ந்த அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவைச் சுவாசித்ததால் ஆலைக்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுப் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், நச்சு வாயுவின் வீரியம் காரணமாகக் கடந்த 7 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 15 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த தொழிலாளர்களில் மேலும் ஒருவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தின் ஒட்டுமொத்தப் பலி எண்ணிக்கை தற்போது 16 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலர் படுமோசமாக பாதிக்கப்பட்டு, உடல் உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும், கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் தேடித் தமிழ்நாட்டிற்கு வந்த வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் அனைத்தும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் உரிய பாதுகாப்புடன் அவர்களின் சொந்த மாநிலங்களுக்குத் தனி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தையே உலுக்கி வரும் இந்த நச்சு வாயு கசிவு விபத்து குறித்துத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் மற்றும் பெரியபாளையம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்தும், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
