அமோனியா வாயு கசிவு.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு... அதிகாலையில் மேலும் ஒரு பெண் தொழிலாளர் பலி!

 
வாயு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேர்ந்த கொடூர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த நச்சு வாயு விபத்தில் பலியானோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மாலை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முகாமிட்டிருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் 5 தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அமோனியா வாயு கசிவு மருத்துவமனை

இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் உயிருக்கு வாரா வதந்தியாகப் போராடி வந்த வடமாநிலப் பெண் தொழிலாளர் ஒருவர், இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இது தொழிலாளர்களின் குடும்பத்தினரிடையே மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்துப் பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தொழிற்சாலையில் நிலவிய அஜாக்கிரதை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத குற்றத்திற்காகக் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆலை உரிமையாளர் மோகன், அவரது சகோதரர் ஜோசப் ஜெகன் மற்றும் பொது மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று இரவே அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

வாயு

ஆலை வளாகத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட 141 வடமாநிலத் தொழிலாளர்களும் தற்போது அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள சூழலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற 4 தொழிலாளர்களின் நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.