அமோனியா வாயு கசிவு.. பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு.. பலர் கோமா நிலையில் உள்ளதால் அச்சம்!

 
வாயு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற இந்த நச்சு வாயு கசிவு விபத்தில், தொழிற்சாலையில் தங்கிப் பணியாற்றிய 74 வடமாநிலத் தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் நச்சு வாயுவை அதிகளவில் சுவாசித்த வடமாநிலத்தைச் சேர்ந்த 13 பெண் தொழிலாளர்கள் நேற்று வரை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாயு

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மேலும் ஒரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள 2 அரசு மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளில் தற்போதும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நச்சு வாயுவின் வீரியம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தற்போது கோமா நிலைக்குச் சென்றுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

வாயு

இந்த விபத்து தொடர்பாகப் பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விதிகளுக்குப் புறம்பாகத் தொழிற்சாலையை இயக்கியது மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போதிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் வடமாநிலத் தொழிலாளர்களை இடைத்தரகராகச் செயல்பட்டு வேலைக்கு அழைத்து வந்த சுரேஷ் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.