அமோனியா கசிவு.. உரிமையாளர் உட்பட 2 பேர் கைது - ”தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை” - அமைச்சர் பர்வேஸ் குமார்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேர்ந்த அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, விதிமுறைகளை மீறித் தவறு செய்தவர்கள் மீது அரசு தரப்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் குமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் அவசர உத்தரவின் பேரில், விபத்து நடந்த கன்னிகைப்பேர் பகுதி மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பர்வேஸ் குமார், இந்த அமோனியா நச்சு வாயு கசிவு விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்துத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர். ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டிருந்தால், அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை பாயும்.

இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி இதுவரை 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான நிதியுதவிகள் குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், "விபத்தில் சிக்கிய 64 தொழிலாளர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் தங்கு தடையற்ற உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா இரண்டு இலட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் மற்றும் வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வமான முழு இழப்பீட்டுத் தொகையையும் உடனடியாகப் பெற்றுத் தர அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என அமைச்சர் பர்வேஸ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்து தொடர்பாகப் பெரியபாளையம் போலீசார் 'செயிண்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ்' நிறுவனத்தின் உயர் நிர்வாகி டேனியலை ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்குச் சட்டப்பூர்வ நீதியைப் பெற்றுத் தரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
