அமோனியம் வாயுக் கசிவு.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

 
வாயு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர விபத்து தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பலருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் ஆலையின் குளிரூட்டும் பிரிவில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அம்மோனியா வாயு கசிந்தது. இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

வாயு

இவ்விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து நிகழ்ந்த உடனும், அடுத்தடுத்த நாட்களிலும் சிகிச்சை பலன் அளிக்காமை காரணமாக ஏற்கனவே 9 பேர் உயிரிழந்திருந்தனர்.  இந்நிலையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதை அடுத்து, பெரியபாளையம் விபத்தில் பலியானோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

வாயு மருத்துவமனை

இன்னும் சிலர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வரும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.