மதுபான பாரில் பில் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

 
பார் மொட்டை

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபானக் கடை ஒன்றில், லட்சக்கணக்கில் பில் தொகையைச் செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற 18 வயது இளம்பெண்ணின் தலை கட்டாயமாக மொட்டையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக்கின் பிங்க்லாவ் பகுதியில் உள்ள பிரபல மதுபானக் கடைக்குச் சென்ற 18 வயது இளம்பெண், தனது வயதை மறைக்கப் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியுள்ளார். அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் அடுத்தடுத்து சுமார் 200 விதவிதமான மதுபானங்களை அவர் ஆர்டர் செய்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த பில் தொகை 60,000 தாய் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.5 லட்சம்) ஆகியுள்ளது. பில் தொகையைக் கொடுக்காமல் அவர் தப்பிக்க முயன்றதால் ஊழியர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.

பெண்கள் மது சரக்கு பார்

பெண்ணின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாததால் ஆத்திரமடைந்த பாரின் பொது மேலாளர், அந்த இளம்பெண்ணைப் போலீசாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அவரது நீண்ட கூந்தலை 3,000 பாட்டுக்கு வாங்குவதாக ஒரு ஒப்பந்தம் தயாரித்துக் கட்டாயக் கையெழுத்து பெற்றுள்ளார். பின்னர் எலக்ட்ரிக் கிளிப்பர் இயந்திரம் மூலம் அந்த இளம்பெண்ணின் தலை முழுமையாக மொட்டையடிக்கப்பட்டது.

மது மதுபானம் பீர்

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாருடன் சென்று காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். தற்போது பார் நிர்வாகத்தினர் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள நிலையில், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இளம்பெண்ணை அவமானப்படுத்திய மேலாளரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.