தவெக-வுடன் கூட்டணியா? காங்கிரஸில் வெடித்தது கலகம் - முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா! "சந்தர்ப்பவாத அரசியல்" என விளாசல்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைப் பெறத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸின் ஆதரவை நாடியுள்ளது. இதற்குச் சாதகமாக ராகுல் காந்தி வாழ்த்துத் தெரிவித்த நிலையில், காங்கிரஸின் இந்த நகர்வை எதிர்த்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்களது பதவிகளை இன்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாகத் தேசிய தலைமைக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், "திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்துவிட்டு, முடிவுகள் வந்தவுடன் தவெக-வுடன் கைகோர்ப்பது என்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம் மற்றும் இது ஒரு கேவலமான சந்தர்ப்பவாத அரசியல்."

தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவிட்டு, இப்போது பதவிக்காகத் தவெக-விற்கு ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த இரண்டு நிர்வாகிகளின் வெளியேற்றம் ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், மாவட்ட அளவிலான பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலைமையின் இந்த முடிவால் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, திமுக-வோடு நீண்டகாலமாகப் பயணித்த ஒரு தரப்பினர், தவெக-வோடு இணைவதை முற்றிலுமாக எதிர்த்து வருகின்றனர்.

காங்கிரஸின் இந்த உள்கட்சிப் பூசல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. "மாநிலத்தில் பதவி முக்கியமா அல்லது தேசிய அளவில் திமுக-வின் நட்பு முக்கியமா?" என்ற தர்மசங்கடமான நிலையில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது.
