"காலம் தாழ்த்தாமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்!

 
திருமாவளவன் விஜய்

மேகதாது அணை மற்றும் காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்துத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். கர்நாடக அரசு காவிரி நீரை வழங்கத் தொடர்ந்து மறுத்து வரும் சூழலில், இனியும் அம்மாநிலத்தை நம்புவதில் அர்த்தமில்லை. மேகதாது அணை விவகாரம் மிகவும் முக்கியமானது என்பதால், காலம் தாழ்த்தாமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.

திருமாவளவன்

நீட் தேர்வு வேண்டாம் என்பதே கொள்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழகம் மேற்கொண்டு வரும் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் நோக்கத்திலான 'வந்தே மாதரம்' மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மீறி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே வலுத்து வருகிறது.