கிணற்றுக்குள் 3 நாட்கள் உணவின்றி தவித்த முதியவர்.. மோட்டார் பம்பைப் பிடித்து உயிர் தப்பிய அதிசயம்!

 
கிணற்றுக்குள் கிணற்றுக்குள்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கிணற்றில் விழுந்து மூன்று நாட்களாகத் தவித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், தனது நண்பரின் சமயோசித முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாச ஆச்சார்யா (62) என்பவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 4-ம் தேதி (சனிக்கிழமை), தனது வீட்டின் முன்புள்ள 20 அடி ஆழக் கிணற்றின் சுற்றுப்பகுதியை அவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். கிணற்றுக்குள் விழுந்த சீனிவாச ஆச்சார்யா, அங்கிருந்த மோட்டார் பம்புசெட் குழாய் மற்றும் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டார்.

கிணறு

கிணற்றுக்குள்ளேயே இருந்தபடி உதவி கோரி சத்தமிட்டுள்ளார். ஆனால், அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததாலும், அவர் தனியாக வசித்து வந்ததாலும் அவரது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சுமார் 3 நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி கிணற்றுக்குள்ளேயே உயிருக்குப் போராடி வந்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) காலை, சீனிவாச ஆச்சார்யாவின் நண்பர் கணேஷ் என்பவர், கேஸ் சிலிண்டர் வாங்குவது தொடர்பாகப் பேசுவதற்காக அவர் வீட்டிற்கு வந்துள்ளார். வீடு பூட்டியிருந்ததால் அக்கம் பக்கத்தில் தேடிய அவர், கிணற்றுப் பகுதியில் சத்தம் கேட்பதை உணர்ந்து எட்டிப் பார்த்துள்ளார். அங்கு சீனிவாச ஆச்சார்யா உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

கிணறு

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். 3 நாட்களாகப் பலவீனமடைந்திருந்த முதியவரை லாவகமாகப் பிடித்து, கயிறு மூலம் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்தனர். தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதுமை மற்றும் போதிய உணவின்றி இருந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் 3 நாட்களாகக் கிணற்றுக்குள் போராடி உயிர் தப்பிய முதியவரைப் பொதுமக்கள் வியப்புடன் பாராட்டி வருகின்றனர்.