வீட்டுச் சமையல்காரரை சிறைவைத்த ஐபிஎல் வீரர் சஷாங் சிங் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆல்-ரவுண்டராக விளையாடி வரும் பிரபல கிரிக்கெட் வீரர் சஷாங் சிங் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் சிங் ஆகியோர் மீது, தங்களது வீட்டுச் சமையல்காரரைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகப் போபால் போலீசார் குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் மெந்தூரி கிராமத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் சஷாங் சிங்கின் சொகுசு இல்லத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீட்டில் சமீபத்தில்தான் விபேந்திர சிங் தோமர் (31) என்பவர் சமையல் வேலைக்காகப் பணியில் சேர்ந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே, சமைத்த உணவின் தரம் சரியாக இல்லை எனக் கூறி சஷாங் சிங்கும் அவரது தந்தை சைலேஷ் சிங்கும் விபேந்திர சிங்கை தகாத வார்த்தைகளால் பேசி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
அங்கு நிலவிய மோசமான சூழலை உணர்ந்த சமையல்காரர் விபேந்திர சிங், தனக்கு இந்த வேலை வேண்டாம் என்றும், உடனடியாகத் தனது சொந்த ஊருக்குத் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிரிக்கெட் வீரரும் அவரது தந்தையும், விபேந்திர சிங் வெளியில் யாருக்கும் தகவல் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரது மொபைல் போனைப் பறித்துக் கொண்டு, அவரைத் தொடர்ந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்திச் சிறைவைத்துள்ளனர்.
இதனால் பயந்துபோன விபேந்திர சிங், தப்பியோடி அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை உட்புறமாகப் பூட்டிக் கொண்டுள்ளார். அப்போது, கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், அவரது தந்தை சைலேஷ் சிங் மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆவேசமாக அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், அறைக்குள் இருந்த விபேந்திர சிங்கை மூன்று பேரும் சேர்ந்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய விபேந்திர சிங் தோமர், போபாலில் உள்ள ரதிபாத் (Ratibadh) காவல் நிலையத்திற்குச் சென்று தமக்கு நேர்ந்த கொடூரம் குறித்துப் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், விபேந்திர சிங்கை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்தப் பரிசோதனையில் அவரது முகம், கண்கள் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காயங்கள் மற்றும் வீக்கங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், அவரது தந்தை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் சிங் மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய 3 பேர் மீதும் ரதிபாத் போலீசார் சட்டவிரோதமாகச் சிறைவைத்தல், ஆபாசமாகத் திட்டுதல், அத்துமீறி நுழைந்து தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முறைப்படி எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற உயர் காவல்துறை அதிகாரியின் வீட்டிலேயே இத்தகைய அத்துமீறல் நடந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது போபாலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
