டெலிவரி பையனுக்கு ஆனந்த் அம்பானி புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டி பரிசு!
மும்பையில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வந்த இளைஞரின் நிலையைக் கண்டு நெகிழ்ந்த ரிலையன்ஸ் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி, அவருக்குப் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 'பிளின்கிட்' நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வருபவர் சுஜித் சிங். இவர் சுட்டெரிக்கும் வெயிலிலும், கடுமையான போக்குவரத்து நெரிசலிலும் தனது சைக்கிளிலேயே சென்று வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்து வந்துள்ளார். இவரது இந்த அசைக்க முடியாத உழைப்பையும் சிரமத்தையும் தொழிலதிபர் ஆனந்த் அம்பானி நேரில் கவனித்துள்ளார்.
சுஜித் சிங்கின் கஷ்டத்தைப் போக்கும் வகையில், தனது 'ஆனந்த் சேவா ஃபவுண்டேஷன்' மூலம் அவருக்குப் புதிய 'நோவா' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கியுள்ளார்.
எதிர்பாராத விதமாகப் புதிய ஸ்கூட்டரைப் பரிசாகப் பெற்ற சுஜித் சிங், ஆனந்தக் கண்ணீருடன் ஆனந்த் அம்பானிக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
