கிராமங்களின் தேவைகளை கண்டறிய ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு டிரோன் - அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு!

 
தவெக புஸ்ஸி ஆனந்த்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் பேசிய தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், கிராமப்புற வளர்ச்சிப் பணிகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு டிரோன் வழங்கப்பட்டு, அதன் மூலம் கிராமங்களின் தேவைகள், சாலை வசதிகள் இல்லாத பகுதிகள் மற்றும் தூர்வாரப்பட வேண்டிய நீர்நிலைகளைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ட்ரோன்

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை நிறுவனங்களே முழுமையாகச் செலவிட அனுமதிக்க வேண்டும் என்றும், அரசுத் தரப்பில் அதற்கான திட்டப் பணிகளை மட்டுமே மேற்பார்வையிட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் நடந்த தவறுகள் இனி எக்காலத்திலும் நடக்க அனுமதிக்கப்படாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த மண்டல மாநாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.