தவெக MLA-க்கள் முகாமிட்டுள்ள விடுதிக்கு விரைந்த புஸ்ஸி ஆனந்த்!

 
புஸ்ஸி ஆனந்த் புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் ஒரு எம்.எல்.ஏ ஆதரவுக்காக இழுபறி நீடித்து வரும் நிலையில், தவெக தனது 108 எம்.எல்.ஏ-க்களையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளது.

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் ஒரு சில இடங்கள் தேவைப்படும் சூழலில், எதிர்க்கட்சிகளின் 'குதிரை பேர' (Horse Trading) முயற்சிகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த்

தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்களும் சென்னைக்கு அருகிலுள்ள மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விடுதிக்கு நேரில் வருகை தந்தார். அங்கு முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ-க்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின் போது சில முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால், எவ்விதச் சலனங்களுக்கும் இடமளிக்காமல் ஒற்றுமையாக இருக்குமாறு எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவெக புஸ்ஸி ஆனந்த்

ஆளுநரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருதல் குறித்து எம்.எல்.ஏ-க்களிடம் என்.ஆனந்த் விளக்கியுள்ளார். கட்சித் தலைவர் விஜய்யின் முக்கியச் செய்தியை எம்.எல்.ஏ-க்களிடம் அவர் பகிர்ந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போது எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் தங்க வைக்கப்படுவது வழக்கம். தற்போது தவெக-வும் அதே பாணியைப் பின்பற்றியுள்ளது, தமிழக அரசியல் சூழல் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒருபுறம் விசிக-வின் ஆதரவுக்காகப் பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில், மறுபுறம் தனது பலத்தைச் சிதறாமல் காக்க விஜய் தரப்பு மகாபலிபுரத்தைத் தேர்வு செய்துள்ளது.