ஆனந்தம் ஆனந்தம் ஆடிப்பெருக்குவிழா ! திருச்சியில் கரைபுரண்டோடிய உற்சாகம் !!

 
ஆடிப்பெருக்கு


கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப்பின் ஆடிப்பெருக்கன்று காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்தோடியதால், திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் நேற்று ஆடிப்பெருக்குவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.பஞ்சபூதங்களில் ஒன்றானதாகவும் வாழ்க்கைக்கு ஆதாரமான நீராதாரத்தை வழங்கும் விழாவாக ஆடிப்பெருக்குவிழா தமிழகத்தில் நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக நடைபெறுகிறது. அதிலும் காவிரியாறு பாயும் பகுதிகளில் இது வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு

இந்த ஆண்டு இயற்கையின் கருணையால் காவிரி இருகரைகளையும் தொட்டுக்கொண்டு நிறைவாகச் செல்கிறது. இதனால் காவிரிக்கரையோர மக்கள் மனங்களிலும் உற்சாகம் கரைபுரண்டோடியது. எனவே நேற்று அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, வீரேஸ்வரம் கருடமண்டபம் படித்துறை, திருச்சி சிந்தாமணி படித்துறை, அய்யாளம்மன்படித்துறை, முக்கொம்பு மேலணை ஆகிய பகுதிகளில் திரளான மக்கள் குடும்பத்துடன் கூடி காவிரித்தாய்க்கு மங்கலப்பொருட்களை படையலிட்டு வணங்கினர்.


ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை கோயிலில் இருந்து புறப்பட்டு முற்பகல் அம்மாமண்டபம் மண்டபம் ஆஸ்தானம் வந்து சேர்ந்தார். மாலையில் காவிரித்தாய்க்கு பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம், தாலிப்பொட்டு, அலங்கார பொருட்கள் பலகாரங்களை யானைமீது வைத்து எடுத்து வரச்செய்து காவிரித்தாய்க்கு சீதனமாக வழங்கினார்கள்.

ஆடிப்பெருக்கு


ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரிக்கரை பகுதிகளில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்மாமண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு படையினர் ரப்பர் மிதவைகளுடன் ஆற்றில் குளிக்கும் மக்களையும், கரையோரம் பூஜைகள் நடத்திய மக்களையும் கண்காணித்தனர். முதலுதவி மற்றும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். நேற்றுமாலை காவிரிப்பாலத்தில் திரண்டு நின்று ஆற்றுநீரை கண்டுகளித்த மக்கள் கூட்டத்தால், அப்பகுதியில் அவ்வப்பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web