ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு... 3,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு - அனந்த் அம்பானி அறிவிப்பு!

 
anil ambani

ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனந்த் எம். அம்பானி தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டின் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.மதனப்பள்ளியில் நடைபெற்ற ராயலசீமா தோட்டக்கலை மையம் மற்றும் இந்திய வேளாண் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அனந்த் அம்பானி பங்கேற்றார். அப்போது ஆந்திரப் பிரதேசத்தில் ரிலையன்ஸ் மேற்கொள்ள உள்ள முதலீடுகள் குறித்து அவர் பேசினார்.

விவசாய கழிவுகள், கால்நடை கழிவுகள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கம்பிரஸ்டு பயோகேஸ் எனப்படும் CBG ஆலைகளை ஆந்திராவில் அமைக்க ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அனந்த் அம்பானி தெரிவித்தார்.

இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அடுத்த பல ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேச அரசுக்கு சுமார் ரூ.60,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.விவசாயத்தையும் பசுமை எரிசக்தியையும் இணைப்பதற்கான வாய்ப்பாக இந்த முதலீடு அமையும் என அனந்த் அம்பானி தெரிவித்தார். விவசாயிகள் உணவு பாதுகாப்புக்கு மட்டுமின்றி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கும் பங்களிக்கும் வகையில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ராயலசீமா பகுதியில் ரூ.40,000 கோடி முதலீட்டில் உலகளாவிய தோட்டக்கலை மையம் உருவாக்கப்பட உள்ளது. அதனுடன் இணைந்து அமைக்கப்படும் இந்திய வேளாண் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், ரோபோட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்துடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Treat Me As Son Of Andhra': Anant Ambani Announces ₹1-Lakh-Crore Investment In Compressed Biogas Plants | India News - News18

மேலும், ஜியோ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கிராமப்புற விவசாயிகளுக்கு உள்ளூர் மொழிகளில் இணையவழி பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அனந்த் அம்பானி தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதுடன், கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தில் பசுமை எரிசக்தி மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளில் ரிலையன்ஸ் மேற்கொள்ள உள்ள இந்த முதலீடு மாநிலத்தின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.