5 மணி நேரம் தாமதமான அனந்தபுரி எக்ஸ்பிரஸ்... நள்ளிரவில் வந்ததால் பயணிகள் தவிப்பு!

 
எக்ஸ்பிரஸ் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்

கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலான 2-வது இரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, நாகர்கோவில் டவுன் மற்றும் இரணியல் நிலையங்களுக்கு இடையே புதிய பாதை அமைக்கப்பட்டு, உயர்மட்ட அதிகாரிகளால் அதிவிரைவு இரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சோதனை ஓட்டம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு வரும் பல்வேறு இரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கொல்லத்தில் இருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16724) நேற்று வழக்கத்தை விட 5 மணி நேரம் காலதாமதமாக இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்திற்கு வழக்கமாக இரவு 7:20 மணிக்கு வர வேண்டிய இந்த இரயில், நேற்று நள்ளிரவு 12:00 மணி அளவிலேயே வந்து சேர்ந்தது.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ்

இரயில் நிலையத்திற்கு முன்கூட்டியே வந்த பயணிகள், கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் பிளாட்பாரத்திலேயே 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் இரயில் வந்ததால், நிலையத்திற்கு வெளியே ஆட்டோ மற்றும் பேருந்து வசதிகள் இன்றி பயணிகள் தவித்தனர். இந்தப் பணிகள் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மற்ற சில இரயில்களும் வழித்தடம் மாற்றப்பட்டோ அல்லது தாமதமாகவோ இயக்கப்பட்டன.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ்

நாகர்கோவில் - திருவனந்தபுரம் பிரிவில் நடக்கும் இந்த முக்கியமான இரட்டைப் பாதை இணைப்புப் பணிகள், வரும் வாரங்களில் முழுமையடையும் என்றும், அதன் பிறகு இந்தப் பகுதியில் இரயில்கள் கூடுதல் வேகத்தில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.