தொடரும் அராஜகம்... அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் - 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த அதிர்ச்சிக்குரிய புகார் குறித்துக் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அருகே உள்ள மானூர் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தி வந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பள்ளி வளாகம் மற்றும் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியைப் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் இதனுடன் தொடர்புடைய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது எப்படி?, இதன் பின்னணியில் சமூக விரோதிகள் அல்லது வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
